Tuesday, April 28, 2015

உபநயனம் 

சிறுகதை

“பெரியவாளை பாக்க போறே பூநூலை எடுத்து மாட்டிண்டு போடா”
என்று அம்மா கெஞசினாள்
போம்மா உனக்கு வேற வேலை இல்லை
என்று சொல்லிவிட்டு பனியனுக்கும் மேல் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு புறப்பட்டான் கேஷவ்
அம்மா மறுபடியும் அதே பல்லவியை பாட
ஏம்மா நான் பூநூலை போட்டுண்டு சட்டையை மேல போட்டுண்டு தான் போகப்போறேன் அதுக்கு எதுக்கு உள்ள போட்டுக்கணும்
என்று HANGER தொங்கிய அந்த பூநூலை பார்த்தவாரே கூறினான் கேஷவ்
எப்படியோ போ
என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே போனாள்
இந்த கேஷவ் இருக்கிறானே அவன் எப்பவும் இப்படித்தான் எதாவது ஏடாகூடமாக படித்து விட்டு அதை வைத்துக்கொண்டு சில பழக்க வழக்கங்களை கிண்டலடித்துக் கொண்டிருப்பான் அவன் சொல்வது பல நேரங்களில் சரியான பதிலாகவே மேற்கொண்டு பேசமுடியாமல் செய்யும் வாதமாகவே இருக்கும் ஆனால் பழமையில் ஊறி ப்போன அவன் அம்மா போன்ற வர்களுக்கு அது விதண்டா வாதமாக இருததில் ஆச்சர்யமில்லை
இப்படித்தான் ஒரு நாள் அவர்கள் கிராமமான பரித்திசேரியிலிருந்து கோவில் பட்டாச்சாரியரும் வேறு ஒரு பிராமணரும் விட்டிற்கு சாப்பிட வந்திருந்தார்கள் அவர்களுடன் இவனும் மரியாதைக்கு அருகில் அமர்ந்து சாப்பாட்டிற்கு துணை கொடுத்தான்
அவர்கள் இலையை சுற்றி வட்டமாக நீரை உள்ளங்கையினால் தெளித்துவிட்டு பரிசேஷனம் என்று சொல்லகூடிய ஒரு கடமையை செய்து சிறிது சாதபருக்கைகளை எடுத்து மாதவா கேசவா என்று வாயில் போட்டுக்கொள்ள அம்மா இவனை நோக்கினாள்
இவன் அதற்குள் சாதத்தில் வெண்டைக்காயை பிசைந்து சாப்பிடத் துவங்கி விட்டான்
பையனுக்கு உபநயனம் ஆயிடுத்தோ என்று வினவினார் ராமர் கோவில் பட்டாசாரியார்
“ஆச்சு”
என்று அரைகுறையாக சொன்னார் ஒரு கடமைக்கு அதே காரியத்தை செய்து முடித்து விட்டிருந்த அப்பா
அன்று மாலை அம்மா பெரியவா முன்னாடி சாப்பிடும்போது பரிசேஷனை செய்யணும்ம்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்
என்று அவள் புலம்பலை ஆரம்பிக்க அப்பாவும்
ஆமாண்டா
என்று ஒத்து பாட கேஷவ் அவன் நிண்ட பிரசங்கத்தை ஆரம்பித்து விட்டான்
அப்பா, அந்தகலத்துலே எல்லாரும் தரையிலே உக்காந்து சாப்பிட்டாங்க இலை போட்டு அதுலே எறும்பு பூச்சி எதாவது உள்ளே வந்துடப் போறதேன்னு தண்ணியிலே BRIDGE கட்டினாங்க அதுக்கு பேர் பரிசேஷனம் இப்பத்தான் நாம வீட்டை சுத்தமா வச்சிருக்கோம் டேபிள்லே சாப்பிடறோம் அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை அப்பா.... சாப்பாட்டுக்கு முன்னாடி தொண்டையை நனைச்சிக்கணும்கிறதுக்காக இந்த தண்ணியை கொஞ்சம் எடுத்து வாயிலே விட்டுக்கறோம் அதை செய்யுன்னு சொன்னா ஒரு பயலும் செய்ய மாட்டான் அதுக்குத்தான் இந்த சாமிபெயரெல்லாம்
என்று சொல்லி விட்டு வெளியேறிவிட்டான்
இப்படி ஒவ்வொன்றிலும் தர்க்கம் குதர்க்கம்
அம்மாவுக்கு ஏகப்பட்ட வேதனை
அப்பாவுக்கு
அவன் சொல்வது சரிபோல தோன்றும் ஆனால் பொண்டாட்டிக்காக விட்டுகொடுக்க மனமில்லாமல் அரை குறையாக அந்த கடமையை செய்து முடிக்கும் ஒரு சாதாரண அரை குறை ஜன்மம்
தாத்தா தெவசத்தின் போது இவன் படுத்தி வச்ச பாடு இருக்கிறதே அப்பா!!!!
அம்மா வெறுத்து பொய் எக்கேடுகெட்டு போய்த் தொலை! தெவசமெல்லாம் பண்ணா உனக்கு உன் குழந்தைகளுக்கு நல்லது என்ன சொல்லறேள்
என்று அம்மா அப்பாவைப் பார்த்து கேட்க அப்பாவும்
இதற்கு பயந்துதானே இத்தனை வருஷமா நீ சொல்லறதெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்
என்று நினைத்துக்கொண்டார்
மானசிகமாக கேஷவை பெருமையாகப் பார்த்தாலும் ஒப்புக்கொள்ள முடியாமல் ஆமாம் என்று தலை அசைத்து வைத்தார்
என்ன நல்லது?
ஆரம்பித்து விட்டான் கேஷவ்
அந்தகாலத்துலே பிராமணா வேற வேலை இல்லாமல் இருந்தா யாராவது சாப்பாடு போட மாட்டாளான்னு ஏங்கினா அதனாலே ஒவ்வொரு சிறார்த்தின் போதும் அவங்களை கூப்பிட்டு சாப்பாடு போடணும்னு அவங்களாகவே ஒரு விதியை உண்டாக்கினாங்க ஒரு வேளைக்கு 3 பேரை சும்மா கூப்பிட்டா நீங்க சாப்பாடு போடுவீங்களா... மாட்டீங்க அதனாலே அவங்கள்ளே ஒருத்தரை விஷ்ணுன்னும் ஒருத்தரை பிரம்மான்னும் ஒருத்தரை பித்ருன்னும் சொல்லி சாப்பாடு போட்டாங்க இல்லன்னா உங்களை எப்படி பயமுறுத்தறது இதுல வேற அவங்களைப் பாத்து சாப்பாடு நன்னா இருந்துதான்னு தமிழ்லே கேக்க மாட்டாங்க சமஸ்கிரத்துலே கேட்டா தான் அது மந்திரம் அவங்களும் திருப்தியா சாப்பிட்டேன்ன்னு போய்டுவாங்க ஏன் தெவசத்தன்னிக்கு பத்து பேருக்கு அன்னதானம் பண்ணுங்களேன்
டேய் போதும் நிறுத்துடா மந்திரத்தை எல்லாம் பழிக்காதே
என்ன மந்திரம் இன்னாருக்கு நான் சாதம் போடறேன்னு நெய் போடறேன்னு சொல்லி அக்னியிலே போடறதுக்கு பேரு மந்திரமா
அம்மா வால் இரண்டு சொட்டு கண்ணீரை தவிர வேறு எதையும் பதிலாக சொல்ல முடியவில்லை இவன் இதெல்லாம் எந்த புஸ்தகத்துலே படிச்சான் IIT படிக்க வச்சு ரெண்டு வருஷம் அமெரிக்க அனுப்பினது தப்போ என்று நொந்து கொண்டாள்
இவன் விஷயத்தில் இனிமேல் எதுவும் பேசாமல் இருப்பது தான் உசிதம் என்ற முடிவுக்கும் வந்தாள்
இந்த குலம் இப்படி அழிந்து போவதற்கு காரணம் என்னவென்று அவளுக்கு ஓரளவுக்கு விளங்க ஆரம்பித்தது
இது எல்லாத்துக்கும் மேலே ஒரு நாள் இவங்க வீட்டிற்கு ஒரு பெரிவர் வந்திருந்தார்
இவன் அவரை நமஸ்கரித்தான்
அவர் சும்மா இல்லாமல் கேசவாஉனக்கு அபிவாதையே தெரியுமா எனக்கேட்டு விட்டார்
ஓ நல்லா தெரியும் நான் இன்னார் குலத்துலே இந்த பாரத பூமியிலே இந்த கோத்திரத்துலே இந்த தாத்தாவுக்கு பேரனா இந்த அப்பாவுக்கு பையனா பொறந்திருக்கேன் என் பேரு கேசவன் என்னை ஆசீர்வாதம் பன்னுங்கோன்னு ஆங்கிலத்துலேயும் தமிழுலேயும் கலந்து அடிச்சான் பாருங்கோ அவர் முகம் சிறுத்து போய்விட்டது
நான் வரேம்பா பையன் கருப்பு சிகப்பு கட்சிலே சேர்ந்துட்டானோ
என்று கூறிவிட்டு புறப்பட்டார்
அன்றையிலிருந்து ரெண்டு நாட்கள் அம்மா அவனிடம் பேசவில்லை
அன்று ஒரு வெள்ளிக்கிழமை
மாலை
இவன் விட்டிற்கு திரும்பும் போது முகமெல்லாம் வாடி காணப்பட்டான்
அம்மா மனது தாங்குமா
என்னடா உடம்பு சரியில்லையா என்றாள்
அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா
என்று சொல்லி விட்டுல் குளித்து விட்டு வந்து டைனிங் டேபிள் நாற்காலில் அமர்ந்தான்
அம்மா ரெண்டு தோசை எடுத்து தட்டில் வைத்து விட்டு மிளகாய்பொடி போடுவதற்கு முன்பு
என்னடா ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கே டாக்டரை பாக்கணுமா
அதெல்லாம் இல்லைம்மா வரும்போது ஒரு INCIDENT பாத்தேன்
ACCIDENT ஆ உனக்கு ஒண்ணுமில்லையேடா
ஐயோ அம்மா அது ACCIDENT இல்லை ஒரு இன்சிடென்ட் மாம்பலத்துலே ஒரு வயசானவர் சைக்கிள்லே போயிண்டு இருந்தார் நெத்தியிலே பட்டையா திருமண் திறந்த மார்பு கட்டையா குடுமி சட்டை ஏதும் போட்டுக்காம சைக்கிள்ளே வந்திண்டிருந்தார் அப்ப திடிர்னு ரெண்டுபேர் மோட்டார் சைக்கிள்லே வந்தாங்க
டே ஐய்யரே நில்லுடா ன்னாங்க அவர் தட்டு தடுமாறி கிழே சைக்கிளை போட்டுண்டு விழாத குறையா உக்கார இவங்க ஏன்டா உனக்கு ஒரு பூநூல் ஒரு குடுமி பாப்பார பயலே கோவிலுக்கு போறியோ என்று சொல்லிவிட்டு ஒருத்தன் அவர் குடுமியை பிடிச்சு இழுக்கறான் கண்ட வார்தைகளாலே திட்டி கன்னத்துலே ரெண்டு அறை பல்லு உடைஞ்சு வாயிலே ரத்தம் வழியறது
அய்யய்யோ
ஒருத்தன் கத்திரிகோலாலே குடுமிய வெட்டறான் ஒருத்தன் அவர் பூநூலை வெடுக்குன்னு பல்லாலே கடிச்சு அறுத்துட்டான்
அவர் கத்தறார் ஐயோ நாராயண என் பூநூல் ன்னு கத்தறார்
ஒருத்தன் ஹெல்புக்கு வரணுமே ஊஹும் நான்ந்தாம்மா அவரை பிடிச்சு உக்கரவச்சிட்டு சோடா வாங்கி கொடுத்து அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் போனோம் எல்லாரும் போடடோ எடுத்துண்டா.. பேப்பர்லே போட! கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்தேன்
தோசையை சாப்ப்பிடாமல் எழுந்தான்
என்னடாது கலி முத்திடுத்துன்னு வேதம் சொல்லறது சரிதான் சாப்பிடுடா
இல்லைம்மாவேணாம்
என்று சொல்லிவிட்டு படுக்க போனான் கேஷவ்
மறுநாள் கலை
அவன் யாரிடமும் பேசவில்லை குளித்து விட்டு உடை மாறிக்கொண்டு office போக தயாரானான் அம்மா எதேச்சயாக அவன் உடைகள் வைத்திருக்கும் அலமாரிக்குள் பார்க்க அங்கு எப்போதும் மாட்டிவைத்திருக்கும் இடத்தில் அவனது பூநூலை காணவில்லை
வாசலுக்கு வந்த அம்மா மோட்டார்சைக்கிள் உதைத்து கொண்டிருந்த கேஷவிடம் வந்து
நீ எதையும் மனசிலே வச்சிண்டு கவலைபடாதே ஜாக்கிரதையா போயிடடு வா
என்று சொல்லி வழியனுப்பி வைக்குமுன் அவனை கட்டிக்கொண்டாள் அவள் விரல்கள் முதுகை வருடின
அங்கு நெருடியது
அம்மா புன்னகைத்தாள்
Like · Comment · 

No comments:

Post a Comment