Tuesday, September 2, 2014

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பற்றி திரு RVS அவர்களின் எண்ணங்கள்


என் டிஸயரை ஒட்டி உரசி உறவாட வரும் அந்த இருசக்கர ஹோண்டாக்காரனின் டப்டப்டப் சப்தம் குதிரையின் குளம்பொலி போலக் கேட்கிறது. ஹெல்மெட் அணியாத முகத்தில் அவனது குறுவாள் மீசையைப் பார்த்தால் “அட! இவன் வானவர் குல வல்லவரையன்!!” என்று குதிக்கிறது மனம். ப்ளக். ”ச்சேச்சே! இது என்ன பிரமை..” என்று ரெண்டு சிக்னல் தள்ளி வந்தால் ஹெச்டிஎஃப்ஸி செக்யூரிட்டியின் முரட்டு மீசையும் பெரிய கண்ணும் அகண்ட கிருதாவும் ப்ளு யூனிஃபார்மில் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரே ஏடியெம்மிற்கு பாதுகாப்பாக நிற்பது போன்று இருந்தது. அவர் பக்கத்தில் மூடிய சிவிகையும் அதில் அவர் சமீபத்தில் கல்யாணம் செய்துகொண்ட இளமங்கை நந்தினியும் தென்படுகிறாளா என்று தேடிப் பக்கத்து ஷேர் ஆட்டோவில் நெருக்கியடித்து இரு காதுக்குள்ளும் ஒயர்கள் ஓட உட்கார்ந்திருந்த ஐடி மங்கையின் மேல் போய் பார்வை விழுந்தது. ப்ளக். ச்சே! இது என்ன விபரீத சிந்தனை!! தலையை உதறிக்கொண்டேன்.

சமீபத்திய கோடை மழையினால் கணுக்கால் அளவு தண்ணீர் ஏறிக் காணப்பட்ட போரூர் ஏரி 74 மதகுகளைக் கொண்ட பரந்து விரிந்த வீரநாராயண ஏரி போல மலைக்க வைக்கிறது. ப்ளக். ஏரியின் கரையில் ஒதுங்கியிருந்த ப்ளாஸ்டிக் பைகளும் குப்பைகளும் என்னைப் பிடறியில் தட்டி நிகழ்காலத்துக்கு கொண்டுவந்தது. ப்ளக். சீராக வண்டி ஊர்ந்து கொண்டிருக்கும் போது சற்று தூரத்தில் கொஞ்சம் கட்டையாகவும் தடிமனாகவும் நெற்றி மணக்க நாமமும் இட்டுக்கொண்டு ரோடோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவரை “ஓய்! ஆழ்வார்க்கடியான் நம்பி.. இங்கே வாருமய்யா... என்ன தைர்யம் இருந்தால் ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் காலைக் கழுவிய தண்ணீர்தான் திருவானைக்காவலில் சிவனாரின் அபிஷேகத்திற்கு பயன்படுகிறது என்று சிவ அபவாதம் செய்வீர்..” என்று வீரசைவர் போலக் கலகமூட்டும்படியாகக் கேட்க நா எழுந்தபோது அவர் மாநகரப்பேருந்தில் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தார். அவர் நம்பியில்லை. ப்ளக்.

சிறு அணியாக டிஎல்லெஃபிலிருந்து வெளிவந்த நாரீமணிகளில் ஒருத்தி சோழர் குல இளைய பிராட்டி குந்தவை மாதிரியும் பக்கத்தில் ஒடிசலாக இருந்தவள் அருள்மொழிவர்மனை மயக்கம் போட்டுக் கவிழ்த்த வனிதாவாகவும் ஏனையோர் இளவரசிகளின் தோழிகளாகவும் கலகலச் சிரிப்பில் வந்தபோது டப்டப்டப்டப்பில் ஆரோகணித்து வந்தியத்தேவன் துரத்தி வருகிறானா என்று ரியர்வ்யூ மிரரில் தேடினேன். ஊஹும். இல்லை. ப்ளக். மியாட் ஹாஸ்பிடல் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது எதிரில் ஓடிய கூவமாயிருந்த அரசிலாற்றில் குந்தவையுடன் கூட வந்தவர்கள் அன்னப்படகில் உட்கார்ந்து வலம் வருகிறார்களோ என்று சீட்டிலிருந்து பாலத்துக்குக் கீழே கட்டாந்தரையை எட்டிப்பார்த்து ஏமாந்தேன். ப்ளக்.

சென்னை ட்ரேட் சென்டர் வாசலில் எனைச் சூழ்ந்து நின்ற வாகனாதிகள் திரும்புறம்பியம் போரில் அணிவகுத்து நின்ற குதிரை மற்றும் யானை சைன்னியம் போலவும் ஓரமாக நடந்து சென்றவர்கள் காலாட்படையைச் சேர்ந்த வீரர்கள் போலவும் இருந்தது. ப்ளக். முன்னால் நகர இடமில்லை என்று தெரிந்தும் வைத்த கை எடுக்காமல் ஹார்ன் அடித்த சிகாமணிகள் போர்ப் பின்னணியில் எழும் யானைப் பிளிரும் சப்தத்தையும் குதிரை கனைக்கும் ஒலியையும் ஒரு சேர உருவாக்கி என்னுடைய விஜயாலய சோழனின் திரும்புறம்பியப் போர்க் கற்பனைக்கு வலு சேர்த்தார்கள். முன்னால் ஊர்ந்தன. என் வண்டி நகர்ந்தது. ப்ளக்.

”இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்” என்று தகரத்தில் எழுதி கேட்டில் தொங்கிய வீட்டை எக்கிப் பார்த்துக் ”இங்கே குடந்தை ஜோதிடர் இருக்கிறாரா?” என்று கேட்க எத்தனிக்கும் போது “ஆ. நாகேஷ்வரன். ஜோதிடர்” என்ற பெயர் என்னை ”ஆ” வென்று வா பிளக்க வைத்தது. ப்ளக். இடும்பன் காரி, கந்தவேள் மாறன், சம்புவரையர், வணங்காமுடி, சேந்தன் அமுதன் என்று ஆண்பிள்ளைகள் யாராவது தென்படுகிறார்களா என்று அலைந்தது என் மனம். ப்ளக்.

என் பேட்டை எல்லையில் சிந்தனையைக் கலைத்த அரைபாடி லாரியின் ஏர் ஹார்னைச் சபித்துக்கொண்டே திரும்பினேன். தெருவிற்குள் ஸோடியம் வாப்பர் விளக்குகள் உருமாறித் தகதகக்கும் தீவர்த்திகள் கம்பத்துக்கு கம்பம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. ப்ளக். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் வரவில்லை என்று உறுதி செய்துகொண்டு ஒரு செகண்ட் கண்ணை மூடித் திறந்தேன். இப்போது மீண்டும் எடிஸனின் ஸோடியம் வாப்பர் லாம்ப் எரிந்தது. மீண்டும் ஒரு டூ வீலர் குதிரையின் டொக்..டொக்..டொக்.. குளம்பொலியுடன் வேகமாகக் கடந்தது. ப்ளக். சிரித்துக்கொண்டேன்.

*************

ஒரு வாரமாக வந்தியத்தேவனுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன். நான் காரில் வர வலது பக்கம் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ரியர் வ்யூ மிரரைப் பிடித்துக்கொண்டே அழிச்சாட்டியமாக கூட வருகிறான்.

பாம்பே கண்ணனின் ( Bombay Kannan Kannan ) அற்புதமான இயக்கத்தில் வந்திருக்கும் “பொன்னியின் செல்வன்” ஒலிப்புத்தகத்தைக் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழில் ஒரு உன்னத முயற்சி. இயக்கத்துடன் ஏற்ற இறக்கங்களுடன் கதை சொல்லும் பாம்பே கண்ணன் ஒரு சமயம் இராமாயண மஹாபாரதக் கதைகள் சொல்லிச் சிவலோகப் பதவியடைந்த என் பாட்டி போலவும் சில சமயங்களில் திண்ணையில் உட்காரவைத்து பேய்க்கதை சொன்ன பக்கத்துவீட்டு கஸ்தூரி அக்கா மாதிரியும் இன்னும் சில சமயங்களில் சினிமாவுக்குப் போய்விட்டு வந்து தோளில் கை போட்டுக் கதை சொல்லும் நண்பன் மாதிரியும் மாறிமாறித் தெரிகிறார். பாம்பே கண்ணனுக்கு கம்பீரமான கணீர்க் குரல். கோட்டைக் கொத்தளங்களில் வந்தியத்தேவன் தப்பித்து வரும் போது டெஸிபல் குறைத்து கிசுகிசுத்து நம்மையும் கூடவே அழைத்துச் செல்கிறார். ஒரு புத்தகத்தை நமக்கு நாமே படிக்கும்போது கூட எப்படி ஏற்ற இறக்கங்களுடன் மனசுக்குள் படித்துக் கொண்டாட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் உரைநடைப் பேச்சு. அபாரம்.

வந்தியத்தேவனின் உச்சரிப்புகள் சில இடங்களில் வழுக்கினாலும் பல இடங்களில் இளைஞனனின் குரலாகப் பந்தாவாக இருக்கிறது. பெரிய பழுவேட்டரையரின் குரலில் அனாயாசமாக அதிகாரம் தொனிக்கிறது. சுந்தரசோழன் கனிவும் கம்பீரமும் ஒன்று குழைத்துப் பேசுகிறார். மன்னையில் அரை ட்ராயர் பிராயத்தின் போது திருச்சி விவிதபாரதியில் புதன் இரவு 8 மணி ட்ராமா கேட்டிருக்கிறேன். படுத்துக்கொண்டே காதால் விஷயங்களைக் கேட்டு கிரஹித்துக்கொண்டு மனக்கண்ணில் ஓட்டிப் பார்ப்பது ஒரு இதமான அனுபவம். கண்ணால் பார்க்கும் சினிமாவிற்கு வடிவழகான மேனியழகைப் போல காதால் கேட்டு ரசிக்கும் ஒலிப்புத்தகத்துக்கு பாந்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான குரலுடையவர்கள்தான் நாயகநாயகியெல்லாம். ஃபாத்திமாபாபுவின்( Fathima Babu ) பின்னணிக் குரல் நேரில் நந்தினியைப் பார்ப்பது போன்ற பரவசம் தருகிறது. இளையராணி நந்தினிக்கு இளமை பொங்கும் குரலில் பேசியிருக்கிறார். இல்லையில்லை. நடித்திருக்கிறார். தீர்க்கமான உச்சரிப்பு.

”இது எவ்ளோ நாள் முயற்சி சார்?” என்று காலையில் கேட்டதற்கு அடக்கமாக “இராப்பகல் பார்க்காம ஒண்ணரை வருஷம் ஆச்சு” என்றார். எனக்குப் புல்லரித்தது. திருட்டு டிவிடி போல ஒருத்தர் வாங்கி எல்லோருக்கும் ஓசியாக இந்த எம்பித்ரீ டிவிடிக்களைக் விநியோகிக்காமல் 600 ரூபாய்க் கொடுத்து வாங்கிக் கேட்டு மகிழ்ந்து நிறைகளைப் புகழ்ந்தும் குறைகளைச் சுட்டியும் இது போன்ற புதுமுயற்சியைப் பாராட்டலாம். ஊக்குவிக்கலாம். டிவிடிக்கள் திரு. பாம்பே கண்ணனிடமே கிடைக்கிறது. வீட்டிற்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறார். கேஷ் ஆன் டெலிவரி.

இவ்விமர்சனத்தை அடித்து முடித்தும் காதுகளில் மொத்தமாகக் குடிகொண்டிருக்கிறார் பாம்பே கண்ணன். இளையராணி ஃபாத்திமாபாபுவாகிய நந்தினியின் குரலும்தான்.

No comments:

Post a Comment