Wednesday, October 15, 2014


பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் பற்றி திரு RVS அவர்கள் எழுதிய விமர்சனம் 



காவேரி தீரம் அமைதி கொண்டு வி்ளங்கிற்று என்று ஒருவர் நிதானமாகக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். பின்னணியில் சலசலவென்று ஆற்றுநீரோடும் ஓசை செவியை நனைக்கிறது. எங்கோ மிதந்துகொண்டிருக்கிறேன். கண் திறந்திருக்க செவிக்குள் புகும் கதையின் காட்சிகள் கருப்பு வெள்ளையாகத் தெரிகிறது. சண்டை போடுகிறார்கள். டிங்...க்ளிங்..களங்.. என்று வாளும் வேலும் மோதுகிறது.
ரௌத்ராகாரமாகப் பேசுகிறார்கள். ராஜ குடும்பத்தின் மேல் விசுவாசம் கொண்ட சிவனடியார் ஒருவர் நா தழுதழுக்க உணர்ச்சிவசப்படுகிறார். வீரபத்ர ஆசாரி வசனமாக நம் முன்னால் வந்து உட்கார்ந்துவிடுகிறார். போர் நடக்கும் காலத்தில் ஆசாரிகளின் பங்கைப் பற்றிப் பேசுகிறார். வள்ளியின் குரல் வெடுக் வெடுக்கென்ற மின்னலாய் வெட்டுகிறது. பொன்னன் பொழுதுதோறும் சளக்பளக்கென்று காவிரியில் படகுதள்ளுகிறான். மாரப்பபூபதி குல சத்ரு. அலட்சியக் குரலில் நயவஞ்சகம் தொணிக்கிறது.

வயது முதிர்ந்த ராஜ குடும்பத்து ஸ்திரீ வரும் காட்சியிலெல்லாம் ”மகனே...மகனே...” என்று உருகுகிறார்கள். கதாநாயகனைக் கட்டிக் கப்பலில் ஏற்றி நாடு கடத்துகிறார்கள். நீலக்கடலில் பச்சைத் திட்டாய் செண்பகத் தீவு வார்த்தைகளில் தெரிகிறது. சோழர் குலத்து இளவரசன் விக்கிரமனைப் பல்லவ குல இளவரசி குந்தவி மகாப்ஸ் வரை துரத்தித் துரத்திக் காதலிக்கிறாள். ஹெஹ்ஹே... என்று அழகு காட்டி பரிகாசம் செய்கிறாள். தந்தையிடம் பாசத்தைப் பொழிகிறாள். மாரப்பனை மிரட்டுகிறாள். நவரசமும் குந்தவியின் குரலில்.
காட்டுவழியில் விநோதமான ஒலியெழுப்பி குள்ளனொருவன் வேடிக்கை செய்கிறான். குலை நடுங்குமாறு கத்துகிறான். அறுபத்து மூவரில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் சேனாதிபதியென்று உலா வருகிறார். இவர்கள் பேசுவதற்கு நடுநடுவே ஒருவர் ஆற்றொழுக்கு போல கதை சொல்கிறார். ம்.. நிச்சயமாக டக்டக்டக்...கென்ற குதிரையின் குளம்பொலிகளும் உண்டு.
ஒலி ரூபமாக குறுந்தகட்டில் வாழும் வீரபத்ர ஆசாரியான பாட்டையா Bharati Mani, குந்தவியாக குறுந்தட்டிலிருந்து தோன்றிய ஒலி ஹீரோயினி மதுரபாஷிணி Ananya Mahadevan, விசித்திரக் குள்ளனாக ஓலமிட்டு மிரட்டிய Haho Sirippananda மற்றும் துளிக்கூட பிசிறில்லாமல் அச்சு வடிவத்திற்கு உணர்வுப்பூர்வமான ஒலிவடிவம் கொடுத்த Bombay Kannan Kannanஅவர்களும் எனது ஸ்நேகிதர்கள்.
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவை பன்னிரெண்டு மணி நேர ஆடியோ புஸ்தக வட்டாக்கி வெளியிட்டிருக்கும் பாம்பே கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விற்பனையில் சரவெடியாய் சாதனை படைத்து அவரது கனவும் மெய்ப்பட வேண்டும்.
நண்பர்களே! தீபாவளிக்கு பார்த்திபன் கனவு பரிசாகட்டுமே!!
‪#‎பார்த்திபன்_கனவு‬



...


No comments:

Post a Comment